Thursday 2 June 2016

அந்தமான், முதல் சுதந்திரப் போர்

ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக 1857ல் வெடித்துக் கிளம்பி 1859ல் முற்றிலும் ஒடுக்கப்பட்ட போரினை முதல் இந்திய சுதந்திரப் போராக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும் அது தாய் மண்ணை மீட்டெடுப்பதற்கான சுதந்திரப் போரா அல்லது வேறு பல காரணங்களுக்கான கிளர்ச்சியா என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள்.

ஆனால் அதே 1859ம் ஆண்டு இந்தியாவின் வேறு ஒரு பகுதியில்தாய் நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்பதுஎன்ற ஒரே நோக்கத்தோடு ஆங்கிலேயர்கள் மீது நடத்தப்பட்ட நேரடிப் போர் நமது வரலாற்றுப் புத்தகங்களில் காணக் கிடைக்காததற்கு காரணம் இருக்கிறது.

ஒரு தலைப்பட்சமாக முடிந்து போன அந்த சண்டை நடந்த இடத்தில் கடந்த மூன்று நாட்கள் நான் தங்கியிருந்தேன்.

அபர்தீன்!

அந்தமான் தீவின் தலைநகரமான போர்ட் ப்ளேர்ரின் முக்கியமான மையப் பகுதி அபர்தீன்.

ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்களா அல்லது அந்தமானிலேயே பரிணமித்து உருவானவர்களா எனபது தெரியாவிட்டாலும், அந்தமானின் பூர்வகுடிகள், பிற மனித இன வாடையே இல்லாமல் அங்கு வசித்து வந்தவர்கள். அவர்களில் முக்கியமான குடிகளானதி கிரேட் அந்தமானீஸ்என்று அழைக்கப்பட்டவர்கள்தாம் 1859ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி 'பறிக்கப்பட்ட அவர்களது மண்ணை மீட்பதற்காக' ஆங்கிலேயர்கள் மீது பல முனைகளிலிருந்தும் ‘பேட்டில் ஆஃப் அபர்தீன்’ என்று கூறப்பட்ட ஒருங்கிணைந்த போரினை தொடங்கினர்.

ஏற்கனவே ஆங்கிலேய சிறையிலிருந்து தப்பித்து பூர்வகுடிகளிடம் அடைக்கலமாகி அவர்களுடனே ஒரு வருட காலமாக தங்கியிருந்ததுநாத் திவாரிஎன்னும்முதல் இந்திய சுதந்திரப் போராளிமுதல் ஆளாக ஓடிப் போய் ஆங்கிலேயரகளிடம் தாக்குதல் விபரத்தைப் போட்டுக் கொடுத்த துரோகமும் நடந்தது.

எது எப்படி என்றாலும், சாதாரண வில் அம்புகளை எதிர்த்து துப்பாக்கிகளும், பீரங்கித் தாக்குதல்களுமாக ஒரே நாளில் நடந்து முடிந்து போன போரில் எத்தனை அந்தமானீஸ் கொன்றழிக்கப்பட்டார்கள்  என்பது இன்னமும் அறியப்படாத ரகசியம்.

உயிர் பிழைத்தவர்கள் ஆங்கிலேயர்களால் பிற பூர்வகுடிகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுநாகரீகத்தின்பரிசாகக் கிடைத்த நோயிலும், மதுப்பழக்கத்திலும் அழிந்தே போக ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது சுமார் ஆயிரம் தலைமுறைகளாக அந்தமானின் பெரும்பகுதியில் வசித்து வந்த அந்தமானீஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெறும் ஐம்பது நபர்களாக அதுவும் தங்களது மொழியை, கலாச்சாரத்தை மறந்தவர்களாக சுருங்கிப் போய் விட்டனர்.

போர்ட் ப்ளேர் சிறிய ஆனால் அழகிய ஊர். நான் இருந்த இரண்டாவது நாள் நல்ல மழை. கண்ணைக் கட்டி திடீரென அந்த நகரின் ஏதாவது பகுதியில் இறக்கினால் கேரளா அல்லது கோவா என்று நினைப்போம்.

அந்தமானின் முக்கிய அம்சம் ஆங்காங்கே இருக்கும் கடற்கரைகளும், தீவுகளும். நன்றாக சுற்ற வேண்டுமென்றால் ஒரு வாரம் தேவைப்படும். அபர்தீன் பகுதியில் தங்கிக் கொண்டால் அனைத்து பகுதிகளையும் பார்த்து விடலாம்;


இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற சுவட்டைத் தவிர

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....